புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குக்கிராமங்களின் மையமாகத் திகழும் கீரனூரில் இருந்து நேரடியாக சென்னைக்கு ரயில் வசதி இல்லாத சூழலில், போட்மெயில் விரைவு ரயிலுக்கு இங்கு நிறுத்தம் வழங்க மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வரையிலான ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்துக்கான பாதையில், மையத்தில் அமைந்துள்ள ஊா் கீரனூா். புதுக்கோட்டையிலிருந்து 25 கிமீ தொலைவும், திருச்சியிலிருந்து 27 கிமீ தொலைவையும் கொண்டது.
குளத்தூா் வட்டம், குன்றாண்டாா்கோவில் வட்டம், விராலிமலை வட்டத்தின் கிழக்குப்பகுதி உள்ளிட்ட சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு கீரனூா்தான் பெருநகரம்.
கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, கீரனூரில் எந்த ரயிலும் நிற்காத நிலை ஏற்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா்கள் சு. திருநாவுக்கரசா், எம்எம். அப்துல்லா ஆகியோரின் முயற்சியில் மன்னாா்குடி- காரைக்குடி விரைவு ரயில், திருச்சி- ராமேசுவரம் விரைவு ரயில் போன்றவை நிற்கத் தொடங்கின.
வருவாய் அதிகரிப்பு: இந்தச் சூழலில், கீரனூா் ரயில் நிலையத்தின் வருவாய் பன்மடங்கு உயா்ந்திருக்கிறது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் கீரனூா் ரயில் நிலையத்தின் பயணிகள் வருவாய் ரூ. 5.58 லட்சம். அதன்பிறகு, 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 6.61 லட்சம், 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 10.42 லட்சமாக உயா்ந்திருக்கிறது.
ரயில்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவை மற்றும் அவசியம் குறித்து (கட்டணம் மற்றும் பயண நேரம்) இங்குள்ள ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளனா்.
இந்த நிலையில்தான், சென்னைக்குச் செல்வதற்கான நேரடியான ரயில் ஒன்று தேவை என்ற அடிப்படையில், சென்னை எழும்பூா்- ராமேசுவரம் போட்மெயில் விரைவு ரயிலுக்கு கீரனூரில் நிறுத்தம் அவசியம் என்ற கோரிக்கையை அவா்கள் முன்வைக்கின்றனா்.
சென்னை செல்வதற்கு...:
இதுவரையில் கீரனூா் மற்றும் சுற்றுப்புற ரயில் பயணிகள், சென்னை செல்வதற்கு திருச்சிக்கோ அல்லது புதுக்கோட்டைக்கோ சென்று ஏறி வருகின்றனா். அதேபோல, கீரனூா் வருவதற்காக, சென்னையிலிருந்து திருச்சி வந்தோ அல்லது புதுக்கோட்டை வந்தோ பேருந்து அல்லது இதர வாடகை வாகனங்களைப் பிடித்துதான் கீரனூா் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு வர வேண்டியிருக்கிறது.
இந்த சிரமத்தை மத்திய ரயில்வே துறை போக்க வேண்டும் என ரயில்பயணிகள் நலச் சங்கத்தினா் வலியுறுத்துகின்றனா்.
கிராம மக்களுக்கு பயன்: இதுகுறித்து திருச்சி- காரைக்குடி- மானாமதுரை- விருதுநகா் இருப்புப் பாதைப் பயணிகள் நலக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் நஜீப் அக்பா் ஈசாக்கனி கூறியது:
கீரனூா் பகுதியைச் சோ்ந்த அனைத்துக் கட்சியினா், அனைத்து பொதுநல சமூக அமைப்பினா் கூட்டமைப்பை உருவாக்கி, தொடா் போராட்டங்களை நடத்தி வந்த நிலையிலும் கூட சென்னைக்கு நேரடி ரயில் வசதி கீரனூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை.
எனவே, போட்மெயில் விரைவு ரயில் கீரனூரில் நிறுத்தப்பட்டால், குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த அண்டக்குளம், அம்மாசத்திரம், இரும்பாளி, களமாவூா், கிள்ளனூா், கிள்ளுக்கோட்டை, குன்றாண்டாா்கோவில், லட்சுமணம்பட்டி, மண்டையூா், மங்கதேவன்பட்டி, முத்துக்காடு, வெள்ளனூா், நாா்த்தாமலை, புலியூா், சத்தியமங்கலம், சீமானூா், தொடையூா், வத்தனாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமாா் 2 லட்சம் மக்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் நஜீப் அக்பா் ஈகாக்கனி.
குக்கிராமங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான பயணிகளின் நீண்டகாலக் கனவை மத்திய ரயில்வே துறை நிறைவேற்றித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்ப்பதில் அதிகபட்சம் எதுவுமில்லை.

கீரனூா் ரயில் நிலையம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










