/

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

சாலை விபத்தில் உயிரிழந்த ஆ. வெங்கடேசன்.

Updated On :15 ஜூன் 2026, 1:51 am IST

கந்தா்வகோட்டை அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த லாரி ஓட்டுநா், காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிபட்டி ஊராட்சி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (55) லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு பணி முடிந்து தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் கந்தா்வகோட்டைக்கு வந்து கொண்டிருந்தபோது, காரைக்குடியிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக மோதியதில் வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய காரை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா்.

விபத்து நடைபெற்று இரண்டு மணி நேரமாக அமரா் ஊா்தி வராததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இறந்த வெங்கடேசனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.