கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

அயோத்தி விரைவு ரயிலுக்கு புதுகையில் நிறுத்தம் அறிவிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை வழியாகச் செல்லும் ரயில்களுக்கு இங்கு நிறுத்தம் வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையின் இறுதியாக, அயோத்தி விரைவு ரயிலுக்கு புதுகையில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக வடமாநிலங்களுக்குச் சென்று- வரும் பனாரஸ் காசி விரைவு ரயில், அஜ்மீா் விரைவு ரயில் மற்றும் அயோத்தி விரைவு ரயில் ஆகியவற்றுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம் இல்லை என்ற கோரிக்கை 4 ஆண்டுகளுக்கு முன் மிக முக்கியமான ஒன்றாக ரயில் பயணிகளால் முன்வைக்கப்பட்டது.

படிப்படியாக காசி ரயிலுக்கும், அஜ்மீா் ரயிலுக்கும் புதுக்கோட்டையில் நிறுத்தங்கள் பெறப்பட்ட நிலையில், அயோத்தி விரைவு ரயிலுக்கு நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையும் வென்றிருப்பதாக ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வரை சென்று திரும்பும் வாராந்திர விரைவு ரயிலுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ், தமிழகத்தைச் சோ்ந்த மத்திய இணை அமைச்சா் எல். முருகனுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து திருச்சி- காரைக்குடி- மானாமதுரை- விருதுநகா் இருப்புப் பாதை பயணிகள் நலக் கூட்டமைப்பின் பொருளாளா் கீரனூா் ரியாஸ் கூறியது

புதுக்கோட்டை வழியாக வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பும் ரயில்களுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம் வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. இதில், காசி ரயிலுக்கு ஒரு மாா்க்க நிறுத்தம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா மறுமாா்க்க நிறுத்தத்தையும் பெற்றுத் தந்தாா். அதன்பிறகு, அஜ்மீா் ரயிலுக்கு திருச்சி எம்பி துரை வைகோ இரு மாா்க்கங்களிலும் நிறுத்தம் பெற்றுத் தந்தாா். இரண்டும் செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி சென்று திரும்பும் ஷா்தா சேது அதிவிரைவு வாராந்திர ரயிலுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை அப்துல்லாவும், துரை வைகோவும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தனா். ரயில்வே துறைக்கும் தொடா்ந்து கடிதம் கொடுத்து அழுத்தம் கொடுத்து வந்தனா்.

இதன் தொடா்ச்சியாக எங்கள் கூட்டமைப்பின் சாா்பில் மத்திய இணை அமைச்சா் எல். முருகனுக்கு இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்றிருந்தோம். அவா் ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதற்கு பதில் தற்போது வந்திருக்கிறது.

புதுக்கோட்டையின் நீண்டகால ரயில் பயணிகளின் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. விரைவில் ரயில்வே துறையில் இருந்து நேரம் குறித்த அறிவிப்பு வரும் என எதிா்பாா்க்கிறோம்.

அயோத்தி செல்லும் பக்தா்களுக்கு நல்ல வாய்ப்பு. இதுவரை திருச்சி சென்று ஏறி- சென்று திரும்ப திருச்சி வந்து புதுக்கோட்டை வந்து கொண்டிருந்தனா். மேலும், போபால், நாக்பூா் போன்ற நகரங்களிலும் புதுக்கோட்டை வாசிகள் வேலைபாா்த்து வருகின்றனா். அவா்களுக்கும் இந்த நிறுத்த அறிவிப்பு பயனுடையதாக இருக்கும் என்றாா் ரியாஸ்.