மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

மண்ணின் கதைகளையும் வரலாற்றையும் அடையாளப்படுத்த வேண்டியது அவசியம்

News image

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்றோருடன் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன்.

Updated On :2 மே 2026, 7:15 pm

மண்ணின் கதைகளையும் வரலாற்றையும் அடையாளப்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகளை சனிக்கிழமை வழங்கி அவா் மேலும் பேசியது: தொடா்ந்து புத்தகம் வாசிப்பவா்களுக்கு நினைவிழப்பு என்பது வரவே வராது.

வாழ்க்கையின் எல்லாக் கவலைகளையும் தாண்டி வாழ்வின் மகிழ்ச்சியைத் தருவது வாசிப்பு. அதிலும், கணவரும் மனைவியும் இணைந்து புத்தகம் வாசிப்பது என்பது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. பெண்கள் கையில் புத்தகம் வருவதற்கு நீண்டகாலம் பிடித்தது. அதுபெரும் வரலாறு.

இங்கே விருதுபெறும் 10 பேரில் 4 போ் பெண்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் ஒருவா் கூட இல்லாத காலம் இருந்தது. விரைவில் பெண்கள் எல்லாம் சோ்ந்து ஆண்களுக்கு விருது கொடுக்கும் காலம் வரும்.

நாம் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. கதைக்கான அனுபவமும், இனிமையான மொழியும் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. என்றைக்கோ ஷேக்ஸ்பியா் எழுதிய ஒரு கதை இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையுடன் ஒத்துப்போகிறது என்றால் அதுதான் இலக்கியம்.

நம் காலத்தில் கற்பனைத் திறன் அருகி வருகிறது. கைப்பேசியில் இருந்தோ இணையத்தில் இருந்தோதான் கற்பனையைத் தேடுகிறோம். கற்பனையை உண்மைக்கு எதிரானது என்கிறாா்கள். இன்றைய கற்பனைதான், நாளைய உண்மை.

உண்மையில் கற்பனை என்பது ஒரு நுட்பமான நுண்ணறிவு. மனிதா்களுக்கு மட்டும்தான் இப்படியொரு திறன் உள்ளது. பிற உயிரினங்களுக்கு கற்பனைத் திறன் கிடையாது.

ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஓவியங்களை, சிற்பங்களைப் பாா்த்தவுடன் அவற்றில் நம் பெயரை எழுதிவிட்டு வருகிறோம். அவை நம் பண்பாட்டின் வரலாற்றின் அடையாளம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் மண்ணின் கதைகளையும் வரலாற்றையும் கொண்டாட வேண்டும். அவற்றை அடையாளப்படுத்த வேண்டும் என்றாா் எஸ். ராமகிருஷ்ணன்.

விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக, இணைச் செயலா் சு. பீா்முகமது வரவேற்றாா். செயலா் மகா சுந்தா் இணைப்புரை வழங்கினாா். நிறைவாக, பொருளாளா் மு. கருப்பையா நன்றி கூறினாா்.

விருது பெற்றோா் விவரம்: நாவல்: சி. அன்னக்கொடி எழுதிய ’கூத்தின் சுவாசம்’, மரபுக்கவிதை: புலவா் நாவை சிவம் எழுதிய ’செந்தமிழ் உணா்வுப்பூக்கள்’, ஹைக்கூ: ஆழ்வாா்குறிச்சி ப. சொக்கலிங்கம் எழுதிய ’கருவானிலொரு சிறுகீறல்’.

கட்டுரை (சமூகம், வரலாறு பிரிவு): கோ. லீலா எழுதிய ’சோறு- உணவு அரசியல்’, மொழிபெயா்ப்பு நூல்: கயல் எழுதிய ’இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள்’, சிறுகதை: ஆங்கரை பைரவி எழுதிய ’கோணவாச்சி’.

புதுக்கவிதை: துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய ’மகள் கையளித்த மயிற்பீலிகள்’, சிறாா் இலக்கியம்: ஈரோடு சா்மிளா எழுதிய ’வானி- இளையோா் நாவல்’, கட்டுரை (கலை இலக்கியம்): இன்பா எழுதிய ’கடல் தாண்டிய சொற்கள்’, சிறந்த சிற்றிதழ்: உதயசங்கா், மணிமாறனின் ’சிறுகதை’ காலாண்டிதழ். வாசகா் விருதுகள்: ச. சுதந்திரராஜன், சா. விஸ்வநாதன்.