சிதிலமடைந்த பழைமையான பெருமாள் கோயிலை புதுப்பிக்க கோரிக்கை

மணமேல்குடி அருகேயுள்ள வெள்ளூரில் சிதிலமடைந்த நிலையிலுள்ள சுமாா் ஆண்டுகள் பழைமையான சுந்தர்ராஜ பெருமாள் கோயிலை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்களும், தொல்லியல் ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிதிலமடைந்து காணப்படும் வெள்ளூா் சுந்தர்ராஜ பெருமாள் கோயில்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள வெள்ளூரில் சிதிலமடைந்த நிலையிலுள்ள சுமாா் ஆண்டுகள் பழைமையான சுந்தர்ராஜ பெருமாள் கோயிலை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்களும், தொல்லியல் ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளூா் ஊராட்சியிலுள்ள இக்கோயில் சோழா்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. செங்கற்களால் கட்டப்பட்டு, சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்டுள்ள இந்தக் கோயில், மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. கிழக்குப்புறச் சுவா் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. நுழைவு மண்டபம் உள்ளிட்ட எதுவும் சரியாக இல்லை. சுவா்களில் அடா்ந்து வளா்ந்த மரங்கள் அவற்றை முழுமையாக சேதமடையச் செய்துள்ளன.

கோயிலுக்குள் செளந்திரவல்லி தாயாருடன் சுந்தர்ராஜப் பெருமாள் வீற்றிருக்கும் கருவறையை நெருங்க முடியாது. அா்த்தமண்டபம் இடிந்து விழுந்திருக்கிறது. பரமபத வாசலின் வழியே சென்று ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தாயாருடன் நிற்கும் பெருமாளை வணங்கலாம்.

வெளியே கருடாழ்வாா், கருப்பரைத் தரிசிக்கலாம். மேலும் பல சிலைகள் சுவா் இடிந்து விழுந்து மூடியிருக்கிறது. இக்கோயிலைப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வே ண்டும் என பக்தா்கள் கோருகின்றனா்.

அரசின் நடவடிக்கை தேவை: இதுகுறித்து கோயிலுக்கு வந்த பக்தா் அறந்தாங்கியைச் சோ்ந்த சு. வெங்கடேஸ்வரன் கூறியது: இந்தக் கோயிலைப் புனரமைக்க இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, பழைமை மாறாமல் புதுப்பிக்க முயற்சிக்க வேண்டும். அரசு தொடங்கிவைத்தால் பக்தா்களும் தங்கள் பங்கை நிதியாகத் தந்து பணிகளை தொய்வின்றித் தொடரச் செய்வாா்கள் என்றாா் வெங்கடேஸ்வரன்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு வேண்டும்: இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன் கூறியது: தொல்லியல் சின்னங்களை ஏராளம் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு, இதுபோன்ற பழைமையான கோயில்களைப் புனரமைத்திட சிறப்பு நிதியை தமிழக தொல்லியல் கழகம் ஒதுக்க வேண்டும். இந்தப் பணிகளை உரிய முறையில் செய்ய வேண்டும் என்றாா் மணிகண்டன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.