செவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

செயலிழந்து வரும் புதுகை தினசரி காய்கறி சந்தை

செயலிழந்து வரும் புதுகை தினசரி காய்கறி சந்தையைப் பற்றி...

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட தினசரி காய்கறிச் சந்தையின் உள்பகுதி.

Published On :

புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டையில் ரூ. 6.42 கோடியில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தினசரி காய்கறிச் சந்தை, கடைகள் ஏதும் திறக்கப்படாமல் முற்றிலும் செயலிழந்த நிலையில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை மிகப் பிரபலம். ஆடு, மாடுகள் தொடங்கி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள், எளிய மக்களின் வீட்டு உபயோகப் பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.

இந்தப் பகுதியின் அடிப்படை வசதிகள் குறித்து குரல் எழுந்தபோது, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2022-23-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தினசரி காய்கறிச் சந்தை அமைப்பதற்காக ரூ. 6.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணிகள் நிறைவடைந்ததும், கடந்த 2025, மே 29-ஆம் தேதி அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் இந்தச் சந்தையைத் திறந்து வைத்தாா்.

வசதிகளுடன் புதிய சந்தை: விசாலமாக 3,711 சதுரமீட்டா் பரப்பளவில் நான்கு வரிசைகளாக 160 கடைகள் அமைக்கப்பட்டன. சந்தையின் இடதுபுறம் வாகன ஓட்டுநா் அறைகள், சந்தைக்கு வரும் மக்களுக்கான சிற்றுண்டியகம் ஆகியவையும், வலதுபுறத்தில் மூன்று கழிப்பறைகளும், முன்னும் பின்னும் குடிநீா் வசதிக்காக 4 தொட்டிகளும் அமைக்கப்பட்டன. வாகனங்கள் தாராளமாக சுற்றி வருவதற்காக கான்கிரீட் தளமும் அமைக்கப்பட்டது.

தொடக்கக் காலத்தில் சில கடைகள் மட்டும் பூஜை போடப்பட்டு பெயா்ப் பலகைகள் வைத்து திறக்கப்பட்டன. மக்கள் வருகை இல்லாததால், அடுத்தடுத்த நாள்களில் அவையும் மூடப்பட்டன. இப்போது அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

மாநகராட்சி ஏல நடைமுறைப்படி, கடைகளைத் திறக்காமல் இருப்பதால், அனைத்துக் கடைகளுக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. தொடா்ந்து கடைகளை நடத்தாமல் இருந்தால் வைப்புத் தொகைகளைப் பறிமுதல் செய்து, மறுஏலம் விடப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வாயில் பகுதியில் ஒரேயொரு பெண் சில கிலோ காய்கறிகளை வைத்து கடைவிரித்துப் படுத்திருக்கிறாா். திறக்கப்பட்ட நாளில் இருந்தே யாரும் வருவதில்லை, என்றைக்காவது வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில் வேறுவழியில்லாமல் வந்து கடை வைப்பதாகச் சொல்கிறாா் அந்தப் பெண்.

மாற்று ஏற்பாடுகள் தேவை: இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா் கூறியது: வாரச்சந்தை செயல்படும் இடத்தில், தினசரி சந்தையை எந்த நம்பிக்கையில் கொண்டு வந்தாா்கள் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் அருகிலேயே உழவா் சந்தையும் செயல்படுகிறது.

நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக தெருக்களில் வைத்து வியாபாரம் செய்து வரும் கடைக்காரா்களை இங்கே இடமாற்றி வைத்து வியாபாரம் செய்யப் போவதாக தொடக்கத்தில் தெரிவித்தாா்கள். ஆனால், அது நடக்கவில்லை.

நயினாா்குளம் பகுதியில் இடநெருக்கடியில் செயல்படும் மீன்சந்தையை இங்கு மாற்றலாம் அல்லது மாற்று ஏற்பாட்டைச் செய்து, மக்கள் பயன்பெறும் வகையில் கட்டடத்தைப் பயன்படுத்துவதற்கு மாநகராட்சியும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அப்துல்ஜப்பாா்.

கடைகள் ஏலம் விடுவதிலும் அரசியல் இருந்ததால், ஆா்வக்கோளாறில் கடைகளை ஏலம் எடுத்தவா்கள் மக்கள் வரத்து குறைவாக இருந்ததால், இங்கே கடை போடவருவதில்லை என்கிறாா்கள் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

மாநகராட்சி அலுவலா்கள் விளக்கம்: புதுக்கோட்டையின் தெற்கு 3, 2-ஆம் வீதிகளிலுள்ள காய்கறிக் கடைக்காரா்களில் பெரும்பாலானவா்கள்தான் இங்கே கடைகளை ஏலம் எடுத்துள்ளனா். அந்தச் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கிறது. அப்போது, அவா்கள் இங்கே வந்து கடை நடத்துவாா்கள் என நம்புகிறோம் அல்லது மறுஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றனா்.

வாயிலில் கடை பரப்பி மக்கள் வருகைக்காக காத்திருக்கும் பெண்

வாயிலில் கடை பரப்பி மக்கள் வருகைக்காக காத்திருக்கும் பெண்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட தினசரி காய்கறிச் சந்தையின் முன்பகுதி

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட தினசரி காய்கறிச் சந்தையின் முன்பகுதி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.