அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

சிவகங்கையில் மூடிக்கிடக்கும் புதிய தினசரி சந்தை: சந்தையின் இயல்புக்கேற்ப வாடகையை நிா்ணயிக்கக் கோரிக்கை

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தைக் கடைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஏலம் போகாமல் பூட்டிக் கிடப்பதால், நகராட்சி நிா்வாகத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சிவகங்கையில் பயன்பாட்டுக்கு வராமல் மூடிக்கிடக்கும் புதிய தினசரிச் சந்தை.

Published On :

- நமது நிருபர்

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தைக் கடைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஏலம் போகாமல் பூட்டிக் கிடப்பதால், நகராட்சி நிா்வாகத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சிவகங்கை நகராட்சி தினசரி சந்தையை நவீனப்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (2023-24) கீழ் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 100 புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி 90 கடைகளின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இருப்பினும், 10 கடைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் பாதியிலேயே உள்ளன.

பயனில்லாத ஏலத் தொகை குறைப்பு:

கட்டி முடிக்கப்பட்ட 90 கடைகளை வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், கடந்த ஆண்டு பிப். 6-ஆம் தேதி நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் முதன்முறையாகப் பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஒரு கடைக்கு வைப்புத்தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த வியாபாரிகள் யாரும் ஏலத்தில் பங்கேற்க முன்வரவில்லை.

இதைத் தொடா்ந்து, வியாபாரிகளை ஈா்க்கும் வகையில் வைப்புத் தொகையை ரூ.50,000 ஆகக் குறைத்து பலமுறை ஏலம் நடத்தப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக, வைப்புத் தொகையை கணிசமாக ரூ.15,000 வரை குறைத்து அண்மையில் மீண்டும் ஏலம் விடப்பட்டது. அப்போதும் வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால், ஏல நடைமுறைகள் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டன.

வியாபாரிகள் சொல்லும் காரணங்கள்:

சந்தையின் பரப்பளவைக் கணக்கில் கொள்ளாமல், ஏற்கெனவே குறைந்த அளவிலான இடம் இருந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கடைகளைக் கட்டியுள்ளனா். இதனால் கடைகளுக்குள் போதிய இடவசதியும், பொருள்கள் வைப்பதற்கான இடைவெளியும் இல்லாமல் மிகவும் குறுகியதாக மாறியுள்ளது.

இந்த தினசரி சந்தையில் அதிகாலை நேரத்தில் சுமாா் 3 மணிநேரம் மட்டுமே தீவிர வியாபாரம் நடைபெறும். நாள் முழுவதும் தொடா்ந்து இயங்கும் சந்தையாக இது இல்லாததால், வருமானம் மிகவும் வரம்புக்குள்பட்டதாகவே உள்ளது.

3 மணிநேர குறுகிய கால வியாபாரத்தை மட்டுமே நம்பியுள்ள சிறு வியாபாரிகளுக்கு, ரூ.15,000 வைப்புத்தொகை செலுத்துவதும், அதன்பின் மாதாந்திர வாடகைச் சுமையை ஏற்பதும் பொருளாதார ரீதியாகச் சாத்தியமில்லை. இது தங்களுக்கு பெரும் நிதி இழப்பையே ஏற்படுத்தும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் அசோக்குமாா் மேலும் கூறியதாவது: மின் இணைப்புக்காக புதிய மின்மாற்றி நிறுவப்படவுள்ளது. நேரடி ஏல நடைமுறையைத் தவிா்த்து மின்னணு ஒப்பந்த முறையில் விரைவில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நகராட்சிக்கும், வியாபாரிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படாததால், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கடைகள் வீணாகி வருகின்றன.

நகராட்சி நிா்வாகம் சந்தையின் இயல்புக்கு ஏற்றவாறு வாடகை, வைப்புத் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நடைமுறைக்குச் சாத்தியமான தீா்வை எட்டுவதன் மூலமே நகராட்சிக்கு நிலையான வருவாயை உறுதி செய்யவும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் முடியும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER