
புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்கக் கோரிக்கை
நீதிமன்றம் - கோப்புப் படம்
புதுக்கோட்டையிலுள்ள எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வேண்டும் என மக்கள் தேசம் கட்சி கோரியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எஸ்சி- எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும். தொடா்ந்து பட்டியலின மக்கள் மீது நடைபெறும் கொலை மற்றும் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து, போா்க்கால அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பட்டியலின மக்களுக்கே செலவிட வேண்டும், வேறு திட்டங்களுக்கு மாற்றி செலவிடக் கூடாது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூக மக்கள்தொகை அடிப்படையில் விகிதாசார இடஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் அ. ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் வேதமணி முன்னிலை வகித்தாா். நிறைவாக புதுக்கோட்டை மாவட்டச் செயலா் தெம்மாவூா் நந்தன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







