அதிராம்பட்டினத்தில் அதிரை பிரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான 15 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி ஜூலை 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இதில், நாகூர், காயல்பட்டினம், சிவகங்கை, தூத்தூர் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் அணியும், நாகை மாவட்டம், நாகூர் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் தூத்தூர் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆட்ட நடுவராக உடற்கல்வி ஆசிரியர் வாசுதேவனும், லைன் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அசாருதீன் ஆகியோரும் செயல்பட்டனர்.
பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்தூர் அணிக்கு ரூ.35,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், ரன்னர் பட்டம் பெற்ற நாகூர் அணிக்கு ரூ.25,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் ஆகியோருக்கும் கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிரை கால்பந்தாட்டக் கழகத் தலைவர் அகமது ஹாஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை அதிரை பிரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் நிர்வாகிகள் முகமது தமீம், சேக் தம்பி, அகமது அனஸ், பாருக், புஹாரி, சமியுல்லாஹ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!






