விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் கட்ட தவணைத் தொகை வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத்தைச் சேர்ந்த 175 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியது:
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகைபெறுவதற்கு மாவட்டத்தில் 68,190 விவசாயிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விடுபட்டுள்ள விவசாயிகளுக்காக திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறஉள்ளன. இதில் பட்டியலில் விடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்து மீனாட்சி (பொது), கணேசன், வேளாண் இணை இயக்குநர் நெடுஞ்செழியன், துணை இயக்குநர்கள் கணேசன், ஜஸ்டின் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
பேராவூரணி : பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், உதவி இயக்குநர் மாலதி தலைமை வகித்து 50 விவசாயிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
வேளாண் அலுவலர் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் திருட்டு

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

மக்கள் தீா்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யாா்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி






