விசைப்படகுகளுக்கு வழங்கப்படாத நிவாரணத்தொகை: வெறிச்சோடிய மல்லிப்பட்டினம் துறைமுகம் 

கஜா புயல் தாக்கி 170 நாள்கள் நெருங்கும் நிலையில், விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படாததால் அவர்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்புடன்



கஜா புயல் தாக்கி 170 நாள்கள் நெருங்கும் நிலையில், விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படாததால் அவர்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட  மல்லிப்பட்டினம் துறைமுகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
2018, நவம்பர் 16 ஆம் தேதி வீசிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார்1595 விசைப்படகுகளில், 188  முழுமையாகவும், 1407 பகுதியாகவும் சேதமடைந்தன. முழுமையாக சேதமடைந்த 188 படகுகளும் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதிகளைச் சேர்ந்தவையாகும்.
அரசின் நிவாரணம் :  புயலால் முழுமையாக சேதமடைந்த படகுக்கு ரூ.5 லட்சமும், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணமாக அறிவித்த அரசு, பகுதியாக சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்கள் வங்கிக் கணக்கில் அத்தொகையையும் செலுத்தியது.
முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி, விசைப்படகு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். தொகையை உயர்த்தி வழங்கத்தான் அரசு காலதாமதம் செய்கிறது என  மீனவர்கள்  நினைத்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு,  சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த 54 விசைப்படகுகளுக்கு மட்டும் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அரசு சார்பில் செலுத்தப்பட்டது.
ஆனால், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 134 விசைப்படகுகளுக்கான நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
வெறிச்சோடிய துறைமுகம்:  தற்போது மீன்பிடித் தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இந்த காலத்தில்  படகுகளைக் கரையில் ஏற்றி, மீனவர்கள் மராமத்துப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் நிவாரணத் தொகை வழங்கப்படாததால்,  படகுகள் இல்லாமலும், மீனவர்கள் நடமாட்டம் இல்லாமலும் மல்லிப்பட்டினம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தடைக்காலம் முடிந்தாலும் கடலுக்கு மீனவர்கள் செல்ல படகுகளைத் தயார் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய படகைக்கூட வாங்க முடியாது: 2004 ஆம் ஆண்டு அரசாணையின்படி,விசைப்படகுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி இழை படகு வாங்குவதற்குக் கூட ரூ.7.50 லட்சம் தேவைப்படுகிறது. அரசு அறிவித்தத் தொகையை வைத்து பழைய படகைக்கூட வாங்க முடியாது. வருமானத்துக்கு வேறு எந்த வழியும் இல்லாததால்தான் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் போராடி வந்தோம். பரிசீலிப்பதாகக் கூறிவிட்டு,  54 படகுகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கிய அரசு,   மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டப் பகுதிகளிலுள்ள 134 விசைப்படகுகளுக்கான நிவாரணத் தொகையை இதுவரை வழங்கவில்லை. 
கேரளத்தை பின்பற்றி
ஓகி புயலால் கேரள மீனவர்கள் பாதிக்கப்பட்ட போது, அந்த மாநில அரசு புதிய படகுகளை வழங்கியது. அதுபோல வழங்காவிட்டாலும், பழைய படகுகளை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தித் தர வேண்டும்.
தொழிலும் இல்லை, நிவாரணமும் இல்லை. இதனால் மீனவர்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது. அவர்களின் வாழ்க்கை தலைநிமிர, தடைக்காலத்துக்கு முன்பே நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறார்  விசைப்படகு மீனவர் பேரவையின் மாநிலச் செயலர் ஏ.கே. தாஜூதீன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com