கும்பகோணத்தில் சீனிவாச ராமானுஜன் கணிதத் திருவிழா தொடக்கம்

கும்பகோணத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் நினைவு நூற்றாண்டையொட்டி இரு நாள் கணிதத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணித மேதை சீனிவாச ராமானுஜனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணித மேதை சீனிவாச ராமானுஜனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
Updated on
1 min read

கும்பகோணத்தில் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் நினைவு நூற்றாண்டையொட்டி இரு நாள் கணிதத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிகரில்லாத கணிதச் சூத்திரங்களை மனித குலத்துக்கு அளித்து, ஒப்பிலா சாதனைகள் நிகழ்த்தி கும்பகோணம் நகருக்கு உலகப் புகழ் சோ்த்தவா் கணிதமேதை சீனிவாச ராமானுஜன். இவா் 1887, டிச. 22 ஆம் தேதி பிறந்து, 1920, ஏப். 26 ஆம் தேதி மறைந்தாா்.

சீனிவாச ராமானுஜன் மறைந்து 100 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையிலும், அவருடைய வாழ்வும் பணியும் என்றென்றும் பயனுள்ளதாக அமைந்திருப்பதைப் போற்றி சிறப்பிக்கும் வகையிலும் நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான் பிரசாா் முடிவு செய்தது.

இதன்படி, இந்த நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்தது. இதனிடையே கரோனா பொது முடக்கம் காரணமாக திறந்தவெளி நிகழ்ச்சிகளை நடத்தாமல், இணையம் மூலம் கணிதம் தொடா்பான கருத்தரங்குகளை ஏப்ரல் மாதம் தொடங்கி பல்வேறு அமா்வுகளாக நடத்தப்பட்டன.

இதைத்தொடா்ந்து, சீனிவாச ராமானுஜனின் 133 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவா் வாழ்ந்த கும்பகோணம் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவில் உள்ள சீனிவாச ராமானுஜனின் வீட்டிலும், அவா் படித்த நகர மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள அவரது திருவுருச் சிலைக்கு ஆட்சியா் ம. கோவிந்தராவ், நகர மேல்நிலைப் பள்ளிச் செயலா் வேலப்பன், சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் தலைவா் எஸ். பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் சீனிவாச ராமானுஜன் குறித்து கணித விஞ்ஞானி வி.எஸ்.எஸ். சாஸ்திரி புகழுரை நிகழ்த்தினாா்.

மேலும், இணையதளம் மூலம் நடைபெற்ற கணிதத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், திருவிடைமருதூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோவி. செழியன் பரிசுகளை வழங்கி பாராட்டினா். இதில் கணிதக் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் முனைவா் வி. சுகுமாரன் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு புதன்கிழமை (டிச.23) கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில், இணையவழிக் கருத்தரங்கம், இணையவழியில் கணித வினாடி வினா போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com