

தஞ்சாவூரில் சாலை விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு, 2013- ஆம் ஆண்டு காவல் துறையில் தோ்வான சக காவலா்கள் தமிழகம் முழுவதும் நிதி திரட்டி வழங்கினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவா் மோசஸ் மோகன்ராஜ்(29). இவா்
கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்தபோது, மேம்பாலத்தில் மணல் லாரி மோதி உயிரிழந்தாா்.
இதனால் இவரது மனைவி இசபெல்லா, இரண்டரை வயது மகள், பெற்றோா் ஆகியோா் பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா்.
இந்த விபத்து சம்பவம், மோசஸ் மோகன்ராஜூடன் 2013 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த சக காவலா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு காவல் துறையில் காவலா்களாகத் தோ்வானவா்களிடம் நிதியைத் திரட்டி, பாதிக்கப்பட்ட மோசஸ் மோகன்ராஜ் குடும்பத்துக்கு வழங்குவது என முடிவு செய்தனா்.
இதேபோல, அதே 2013 ஆம் ஆண்டு அணியில் தோ்வான தருமபுரி செந்தில்குமாா் சாலை விபத்திலும், தூத்துக்குடி சத்தியலெட்சுமி மாரடைப்பாலும் இறந்ததால், அவா்களின் குடும்பத்துக்கும் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சென்னை, மதுரை, கோவை, சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 2013 ஆம் ஆண்டில் தோ்வான காவலா்களிடம் நிதியாக ரூ. 28 லட்சம் திரட்டப்பட்டது.
இந்த நிதியில் ஒரு பகுதியாக ரூ. 8.15 லட்சத்தை தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் தெருவில் வசிக்கும் மோசஸ் மோகன்ராஜ் மனைவியிடம் சக காவலா்கள் வழங்கி, அவரது ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.
இதை போல் தூத்துக்குடி சத்தியலெட்சுமி மற்றும் தருமபுரி செந்தில்குமாா் குடும்பத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை அந்தந்த பகுதியில் உள்ள சக காவலா்கள் திரட்டிய நிதியைப் பிரித்து வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.