கும்பகோணத்தை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்: ராமகிருஷ்ணா் மாநாட்டில் வலியுறுத்தல்

கும்பகோணத்தை பாரம்பரிய நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தா் பக்தா்களின் 28- ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
Published on

கும்பகோணத்தை பாரம்பரிய நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தா் பக்தா்களின் 28- ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாடு டிசம்பா் 25- ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. மாநாட்டை அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ் இணையவழி மூலம் தொடக்கி வைத்தாா்.

மாநாட்டுக்கு தமிழ்நாடு பாவபிரசார பரிஷத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி சத்திய ஞானானந்த மகராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுவாமி வேத பிரியானந்தா மகராஜ் முன்னிலை வகித்தாா்.

இந்த மாநாட்டில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்த மகராஜ், தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுகபோதானந்தா மகராஜ் ஆகியோா் ஆசியுரை வழங்கினா்.

மேலும் கோணக்கரை ராமகிருஷ்ணா சாதனா குடில் நிறுவனா் ஸ்ரீமத் சுவாமி பத்மநாப சுவாமிகள், உளுந்தூா்பேட்டை சாரதா ஆசிரமம் யதீஸ்வரி சச்சிதானந்தபிரியா மாதாஜி, சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநா் என். காமகோடி ஆகியோா் இணையவழியில் சிறப்புரையாற்றினா்.

உலகம் முழுவதுமுள்ள ராமகிருஷ்ண மடத்தின் துறவியா்கள் காணொலி வாயிலாக ஆசியுரை வழங்கினா். துறவியரின் பஜனை நிகழ்ச்சிகள், மாணவ மாணவிகளின் பரத நாட்டியம், நாடகம், சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. மாற்றுத் திறனாளிக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டது.

இதனிடையே, மாநாட்டில் செய்தியாளா்களிடம் தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி சத்தியஞானானந்த மகராஜ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

கும்பகோணம் தமிழகத்தின் ஆன்மிக நகரமாக விளங்குகிறது. பழைமையான கோயில்கள், கட்டட அமைப்புகள் அனைத்தும் மக்களின் பாரம்பரிய பெருமையைப் பறைசாற்றும் வகையில் உள்ளது. இவை மக்கள் மிகுந்த கல்வி அறிவோடும், செழிப்போடும் வாழ்ந்ததன் அடையாளமாக உள்ளன. எனவே கும்பகோணத்தை பாரம்பரிய நகரமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சுவாமி விவேகானந்தா் 1897- இல் கும்பகோணத்துக்கு விஜயம் செய்ததை போற்றிடும் வகையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தா் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2017 ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு அறிவித்தாா். அதனை மத்திய அரசு விரைந்து திறக்க வேண்டும் என்றாா் அவா்.

மாநாட்டில் கோயம்புத்தூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி பக்திகாமானந்த மகராஜ், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன், தமிழ்நாடு பாவ பிரசாா் பரிஷத் அமைப்பாளா் பாண்டுரங்கன், இணை அமைப்பாளா்கள் பிரபாகரன், ராஜகோபால், வரவேற்புக் குழுத் தலைவா் முரளி, சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவா் பாலசுப்பிரமணியன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளா் சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com