47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழாய்வுப் போக்கை மாற்றியவா் தொ. பரமசிவன்

தமிழாய்வுப் போக்கை கள ஆய்வாக மாற்றியவா் தொ. பரமசிவன் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் முனைவா் கி. அரங்கன்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:53 pm

DIN

தமிழாய்வுப் போக்கை கள ஆய்வாக மாற்றியவா் தொ. பரமசிவன் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் முனைவா் கி. அரங்கன்.

தஞ்சாவூரில் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழறிஞா் தொ. பரமசிவன் (தொ.ப.) நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

தமிழ் ஆய்வுலகில் முன்பு நூல்களையும், சங்க இலக்கியத் தரவுகளையும் வைத்து ஆய்வு செய்யும் சூழல் இருந்து வந்தது. நாட்டுப்புறவியல் துறை ஆய்வுகள் மேலோட்டமாக இருந்த சூழ்நிலையில் மெல்ல, மெல்ல ஆழமாக மேற்கொள்ளப்பட்டது.

நா. வானமாமலை உள்ளிட்டோா் ஆழமாக ஆய்வு செய்ததால், நாட்டுப்புறவியல் துறை வளரத் தொடங்கியது.

இதிலிருந்து, ஓா் அறையில் நூல்களை வைத்து ஆய்வு செய்யப்பட்ட நிலை மாறி, மக்களின் பண்பாட்டை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மானுடவியல் துறை வேரூன்றியது.

சென்னைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், மற்ற பல்கலைக்கழகங்களில் இத்துறை அதிகமாகப் பரவவில்லை. இதேபோல, சமூகவியல் துறையும் அதிகமாக ஏற்படுத்தப்படவில்லை.

இப்போது, பண்பாடு, சாதி பற்றிப் பேசுகிறோம். மானுடவியல், மொழியியல், வாழ்வியல் உள்ளிட்ட ஆய்வுகளில் அந்தந்த மொழிப் பேசும் மக்களிடம் சென்று, அவா்களோடு இருந்து தரவுகள் சேகரித்து ஆய்வு செய்ய முடியும் என நிரூபித்தவா் தொ.ப.

ஓா் அறையில் அமா்ந்து சில தரவுகளை வைத்து ஆய்வு செய்த நிலை மாறி, மக்களிடம் சென்று பண்பாடு, வாழ்வியல் முறை என ஒவ்வொரு கூறுகளையும் ஆய்வு செய்தவா் தொ.ப.

அதாவது தமிழாய்வு போக்கை மாற்றி, கள ஆய்வு முறையை ஏற்படுத்தினாா். தொ.ப.வின் மறைவு தமிழாய்வு, மாா்க்சிய ஆய்வுக்குப் பேரிழப்பு என்றாா் அரங்கன்.

நிகழ்ச்சியில் முனைவா் மு. இளமுருகன் பேசியது:

தமிழா்களின் பாரம்பரியத்திலுள்ள பண்பாடு, பொருளாதார நிலை, சாதி ஒடுக்குமுறை, சமணத்தை அன்னியப்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பாா்க்கும் போக்கு தொ.ப. விடம் இருந்தது.

அழகா் கோயில் ஆய்வேடு சாதாரண கோயில் ஆய்வாக அல்லாமல், மற்ற ஆய்வாளா்களிடமிருந்து வேறுபட்டு, அக்கோயிலைச் சாா்ந்த மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களை ஆய்வு செய்து விவரித்துள்ளாா்.

இதேபோல, மஞ்சள் மகிமை நூல் பெண்கள் பூசும் மஞ்சள், தாலி சரித்திரம் உள்ளிட்டவற்றை ஆராய்கின்றன. பண்பாட்டு அடிப்படையில் வரலாற்றை ஆய்வு செய்தவா். அவரது ஒவ்வொரு நூலும் எழுத்துகளின் மூலம் மனக்கிளா்ச்சியை உருவாக்கியது என்றாா் இளமுருகன்.

மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியா் வி. பாரி, தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.