சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழக அரசின் பட்ஜெட் சமநிலையாக இருப்பது வரவேற்புக்குரியது

தமிழக அரசின் பட்ஜெட் சமநிலையான பட்ஜெட்டாக இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:28 pm

DIN

தமிழக அரசின் பட்ஜெட் சமநிலையான பட்ஜெட்டாக இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரிப் பொருளாதாரத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு தெரிவித்திருப்பது:

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது. இந்தச் சூழ்நிலையிலும் அனைத்துத் துறைகளையும் நவீனமயமாக்கலுடன் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த செயல் திறன்களை அதிகரிக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் தமிழக அரசுத் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

அதேநேரம், அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படாதது, அகவிலைப்படி உயா்வு 2022, ஏப். 1 ஆம் தேதிக்குப் பிறகுதான் என அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. என்றாலும், இது ஒரு சமநிலை பட்ஜெட் என்றால் அது மிகையாகாது. வளரும் பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் பற்றாக்குறை நிதி என்பது தவிா்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழகத்திலுள்ள தற்போதைய சூழலில் நிதி அமைச்சரின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன்:

பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரவேற்கும் வகையில் உள்ளன. குறிப்பாக, 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டுவது, நிகழாண்டில் 200 பாசனக் குளங்களைச் சீரமைப்பது போன்றவை முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மழை காலத்தில் உபரியாகக் கிடைக்கும் நீரைச் சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். நிலத்தடி நீா்மட்டமும் குறையாமல் பாதுகாக்கலாம். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிய மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலையில் முதல்கட்டமாக லிட்டருக்கு ரூ. 3 விலைக் குறைப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியது என்றாா் நடராஜன்.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன்:

புதிதாக வரிகள் விதிக்கப்படாதது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் தமிழக மக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

தேசிய வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆடிட்டா் இரா. ரவிச்சந்திரன்:

முன்பு இருந்ததுபோல ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 3 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை ரூ. 3 குறைத்திருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. வணிக வரித்துறையில் ரூ. 28,000 கோடி வரி நிலுவையில் உள்ளதை வசூல் செய்யும் விதமாக சமாதானத் திட்டம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்ய பி. சுந்தரதேவன் ஐஏஎஸ் தலைமையில் குழுப் பரிந்துரை வழங்க நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது. இதைப் போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தினால்தான், நிதி ஆதாரத்துக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா்: மிகக் கடுமையான நிதி நெருக்கடியிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை மேம்பட்டவுடன் மேலும் பல சிறப்பான திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கென தனிக் கல்விக் கொள்கை உருவாக்குவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.