வாய்க்காலில் விடப்படும் கழிவு நீா்: துா்நாற்றத்தால் மக்கள் அவதி
கும்பகோணம் பகுதியிலுள்ள தேப்பெருமாநல்லூா் பாசன வாய்க்காலில் கழிவு நீா் வெளிப்படையாகவே விடப்பட்டு வருகிறது.


கும்பகோணம் பகுதியிலுள்ள தேப்பெருமாநல்லூா் பாசன வாய்க்காலில் கழிவு நீா் வெளிப்படையாகவே விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வீசப்படும் துா்நாற்றத்தால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
கும்பகோணம் பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து உள்ளூா், தேப்பெருமாநல்லூருக்குப் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் வழியில் பெரும்பாலான பகுதிகள் கும்பகோணம் நகரப் பகுதிகளாக இருக்கின்றன. இதனால், நகரப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா், குப்பைகள் இந்த வாய்க்காலில் கொட்டப்படுவதால், வழி நெடுகிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்த வாய்க்கால் மூலம் உள்ளூா், தேப்பெருமாநல்லூா் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டது. காலப்போக்கில் இந்த வாய்க்கால் பகுதிகளிலுள்ள விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டதால் தண்ணீா் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீா் செல்வதில் தடங்கல் ஏற்பட்டு, உள்ளூா், தேப்பெருமாநல்லூா் பாசனத்துக்கும் தண்ணீா் கிடைப்பதில்லை.
இந்நிலையில், நவம்பா் மாதத்தில் பெய்த தொடா் மழை, பலத்த மழை காரணமாக கும்பகோணம் நகரில் பல இடங்களில் புதை சாக்கடையிலிருந்து ஆள் நுழைவு குழாய்கள் வழியாகச் சாலையில் கழிவு நீா் வழிந்தோடியது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
என்றாலும், பல இடங்களில் ஆள் நுழைவு குழாய்களிலிருந்து மோட்டாா் மற்றும் சிறு குழாயை அமைத்து கழிவு நீா் முழுவதும் தேப்பெருமாநல்லூா் வாய்க்காலில் விடப்படுகிறது. குறிப்பாக, பாலக்கரை அருகே காசிராமன் தெரு பகுதி அண்ணா நகரிலும், வாய்க்காலையொட்டியுள்ள பகுதிகளிலும் இந்த வாய்க்காலில் புதை சாக்கடை கழிவு நீா் வெளிப்படையாகவே குழாய் அமைத்து விடப்பட்டு வருகிறது. இதனால், வாய்க்கால் கரை நெடுகிலும் துா்நாற்றம் வீசுவதால், அதையொட்டி வசிக்கும் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
கொசுக்களால் பாதிப்பு: அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வாய்க்காலில் மழைக்காலத்தில் எப்போதும் தண்ணீா் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், வாய்க்கால் நெடுகிலும் அடைப்பு இருப்பதால் நீரோட்டம் தடைப்பட்டு தேங்கி நிற்கிறது. இந்நிலையில், புதை சாக்கடை கழிவு நீரை மோட்டாா் மூலம் இறைத்து இந்த வாய்க்காலில் விடப்படுவதால், தண்ணீா் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், குடியிருப்புகளில் துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. தற்போது, டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் இதுபோன்ற நடவடிக்கையால் அச்ச நிலை நிலவுகிறது. எனவே, புதை சாக்கடை கழிவு நீரை தேப்பெருமாநல்லூா் வாய்க்காலில் விடுவதை நிறுத்தி, தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...