தஞ்சையில் கார் விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்
By DIN | Published On : 19th June 2022 11:43 AM | Last Updated : 19th June 2022 11:43 AM | அ+அ அ- |

விபத்துக்குள்ளான கார்
சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல் குவியல்கள் மீது மோதி கார் தடம்புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர், வடசேரிலிருந்து கார் ஒன்று திருச்சி ஏர்போர்ட்டிற்கு சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் அன்பரசன் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் 6 பேர் பயணம் செய்தனர். தஞ்சை அருகே மருங்குளம் - திருக்கானூர்பட்டி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எதிரே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை குவியல், குவியலாக குவித்து வைத்து தார் பாய் போட்டு மூடியிருந்தனர்.நெல் குவியல்கள் இருப்பது தெரியாமல் கார் அவற்றின் மீது மோதியது. இதில் தார்பாய் கார் சக்கரத்தில் சிக்கியதில் அடுத்தடுத்த நெல் குவியல்களில் மோதிய கார் தடம் புரண்டது. இதில் மதுக்கூர்,வடசேரி, 28 நெம்மேலியை சேர்ந்த திருமூர்த்தி (58) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். தொடர்ந்து காரில் பயணம் செய்த ராமமூர்த்தி (50), பாலமுருகன் (35), மாரிமுத்து (60), சங்கீதா (40), பிரினீத் (5), டிரைவர் அன்பரசன் (45) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டவர்களை தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த திருமூர்த்தி உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.