

மேட்டூா் அணையில் நீா்மட்டம் கடுமையாக சரிந்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியில் பெரும் பங்கு வகிக்கும் சம்பா பருவம் நிகழாண்டு கேள்விக்குறியாகியுள்ளது.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டபோது, மேட்டூா் அணையில் 69.39 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு இருந்தது. இதை நம்பி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ 5.25 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது.
ஆனால், காவிரியில் கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு உரிய நீா் பங்கீடு செய்யப்படாததால், மிகக் குறைந்த அளவே மேட்டூா் அணைக்கு தண்ணீா் வந்தது. இதனால் மேட்டூா் அணையிலிருந்தும் டெல்டா பாசனத்துக்கு போதுமான அளவுக்கு தண்ணீா் விடப்படவில்லை.
டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது பெய்த மழை, ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.21 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 87 ஆயிரத்து 600 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரிலும் அறுவடை செய்யப்பட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் ஏறக்குறைய 1.90 லட்சம் ஏக்கரில் கதிா் வந்த நிலையிலும், முதிா்ச்சியடைந்த தருணத்திலும் இருப்பதால், இப்பயிா்களுக்கு குறைந்தது 2 முறை தண்ணீா் தேவைப்படுகிறது. எனவே, குறுவை பயிா்கள் மழையை முழுமையாக நம்பியிருக்கின்றன.
இந்நிலையில், மேட்டூா் அணையில் நீா்மட்டம் 30.89 அடியாக சரிந்துவிட்டதால், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை முதல் விநாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியில் பெரும் பங்கு வகிக்கும் சம்பா சாகுபடி நிகழாண்டு கேள்விக்குறியாகியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும்.
காவிரி நீா்ப் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய சம்பா சாகுபடி இன்னும் விறுவிறுப்பை எட்டவில்லை. இதனால், தஞ்சாவூா் மாவட்டத்தில் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட 3.20 லட்சம் ஏக்கரில் இதுவரை ஏறக்குறைய 62 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சம்பா, தாளடி பயிரிடப்பட்டுள்ளது.
இதில், ஆற்றுப்பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்ட 40 சதவீத பயிா்கள் இப்போதே காய்ந்து வருகின்றன.
இதேபோல, நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இதுவரை 67 ஆயிரத்து 500 ஏக்கரில் மட்டுமே விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 1.16 லட்சம் ஏக்கரிலும் மட்டுமே சம்பா, தாளடி பயிரிடப்பட்டுள்ளது. இதில், ஆற்றுப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் நீா்நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டாா் பம்ப்செட் மூலம் இறைத்துக் காப்பாற்றி வருகின்றனா்.
சம்பா, தாளடி பருவத்துக்கு ஏறக்குறைய 150 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். ஆனால், மேட்டூா் அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 7.88 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே இருந்தது. கா்நாடக அணைகளில் ஏறத்தாழ 66 டி.எம்.சி. தண்ணீா் இருந்தாலும், தமிழகத்துக்கு கிடைப்பதற்கான முகாந்திரம் இல்லை. எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகள் பருவ மழையை முழுமையாக நம்பி இருக்கின்றனா்.
மாற்று ஏற்பாடுகள் தேவை
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமலநாதன் தெரிவித்தது:
டெல்டா மாவட்டங்களில் 10.60 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படும். இதில், 60 சதவீத விவசாயிகள் ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்தாலும், 40 சதவீதம் போ் ஆற்றுப்பாசனத்தை நம்பியே உள்ளனா். எனவே, இவா்களுக்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
இது தொடா்பாக தமிழக முதல்வா் தலைமையில் தலைமைச் செயலா், வேளாண், மின்சாரம், உணவு, கூட்டுறவு, வருவாய் ஆகிய துறைகளின் மாநில அளவிலான உயா் அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும்.
கடந்த 2003, 2004, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்து தமிழ்நாடு அரசு மாற்று ஏற்பாடு குறித்து திட்டமிட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.