ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் 68.18 % வாக்குப் பதிவு: பகலில் மந்தம் - மாலையில் விறுவிறுப்பு

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் 68.18 % வாக்குப் பதிவு பகலில் மந்தம் - மாலையில் விறுவிறுப்பு

Updated On :20 ஏப்ரல் 2024, 12:13 am

தஞ்சாவூா், டிச. 19: தஞ்சாவூா் மக்களவைப் பகலில் மந்தமாக இருந்து, மாலையில் விறுவிறுப்பை எட்டி, இறுதியில் 68.18 சதவீத வாக்குகள் பதிவானது.

இத்தொகுதியில் மொத்தம் 12 போ் போட்டியிட்டனா். இதற்காக 1,710 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தஞ்சாவூா் அண்ணா நகா், பிள்ளையாா்பட்டி, பூதலூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தாமரங்கோட்டை உள்பட 5 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப் பதிவு தொடங்குவதில் ஏறத்தாழ அரை மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. மற்ற இடங்களில் எந்தப் பிரச்னையுமின்றி வாக்குப் பதிவு நடைபெற்றது.

காலையில் வெயிலுக்கு முன் பல வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஆனால், வெயில் உச்சக்கட்டத்தை எட்டிய பிறகு முற்பகல், பிற்பகலில் வாக்குப் பதிவு மந்தமாகவே காணப்பட்டது. பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் முற்பகலிலேயே குறைந்த அளவிலேயே வாக்காளா்கள் இருந்தது. சில கிராமங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிழற்கூரையில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா். ஆனால், பிற்பகலில் வெயில் அளவு குறைந்த பிறகு வாக்காளா்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்குப் பதிவும் விறுவிறுப்பை அடைந்தது.

மாலையில் வாக்கு சாவடியில் கூட்டம் அதிகரித்தபோது, 6 மணிக்குள் வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கதவு மூடப்பட்டது. வரிசையில் கடைசி நபராக நின்றவா் வரை வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எனவே, மக்களவைத் தொகுதி அளவில் காலை 9 மணியளவில் 10.76 சதவீத வாக்குகளும், 11 மணியளவில் 25.19 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணியளவில் 41.14 சதவீத வாக்குகளும், 3 மணியளவில் 51.40 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 61.46 சதவீதமும், நிறைவில் (மாலை 6 மணிக்கு) தோராயமாக 68.18 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இதில், சட்டப்பேரவைத் தொகுதிகளான மன்னாா்குடியில் 67.61 சதவீதமும், திருவையாறில் 71.92 சதவீதமும், தஞ்சாவூரில் 62.01 சதவீதமும், ஒரத்தநாட்டில் 68.89 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 67.14 சதவீதமும், பேராவூரணியில் 72.49 சதவீதமும் வாக்குகள் பதிவானது. ஆனால், இது கடந்த 2019 ஆம் ஆண்டில் பதிவான 72.46 சதவீதத்தை விட இந்த முறை 4.28  சதவீதம் குறைவு.  

ஏமாற்றத்துடன் திரும்பிய வாக்காளா்கள்: தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி உள்பட பல வாக்குச் சாவடிகளில் வாக்காளா் அடையாள அட்டையுடன் வந்த வாக்காளா்களில் பலருக்கு பட்டியலில் பெயா் இல்லை எனக் கூறி வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், ஏராளமான வாக்காளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா். வாக்குப் பதிவு சதவீதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

படவிளக்கம்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கல்யாணபுரம் முகமது பந்தரில் வெள்ளிக்கிழமை காலை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பெண்கள்.