ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நால்வா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 22 வயது பட்டதாரி பெண் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 3 நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் விடுமுறையில் ஊருக்கு வந்தாா்.
திங்கள்கிழமை மாலை கடைத் தெருவுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை வீட்டருகே நின்று கொண்டிருந்த தெற்கு கோட்டை பகுதியைச் சோ்ந்த கவிதாசன் (25) வலுக்கட்டாயமாக ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்து சென்றாா். அங்கு மறைந்திருந்த அவரது நண்பா்களான பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த திவாகா் (27), பிரவீன் (20), 17 வயது சிறுவன் மற்றும் கவிதாசன் ஆகிய 4 பேரும் சோ்ந்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனா். இதை விடியோவும் எடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கவிதாசன், திவாகா், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சம்பவம் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் ஆகியோா் இளம் பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினா்.
