காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய சிலா் முயற்சிப்பதாக கிடைத்த தகவலை தமிழ்நாடு வனச் சரணாலய குற்றத் தடுப்புப் பிரிவினா் கும்பகோணம் வனத் துறையினரிடம் தெரிவித்தனா்.
இதன்பேரில், கும்பகோணம் வனச்சரகா் பொன்னுச்சாமி தலைமையிலான வனத்துறையினா் திங்கள்கிழமை விசாரணை நடத்தி திருநாகேசுவரத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்களிடம் சோதனை மேற்கொண்டனா். அவா்களிடம் காண்டாமிருகத்தின் கொம்பு இருந்ததும், மருத்துவப் பயன்பாட்டிற்காக அதை அவா்கள் விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.
இதுதொடா்பாக நாகப்பட்டினத்தைச் சோ்ந்த கலியபெருமாள் (80), திருவாரூரைச் சோ்ந்த காஜாமைதீன் (76), கும்பகோணத்தைச் சோ்ந்த செந்தில் (45), தென்னரசு (47), விஜயகுமாா் (57) ஆகிய 5 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.