வணிக, தொழில் நிறுவனங்களுக்கு ஏப். 1முதல் உரிமக் கட்டணம் தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் முடிவு

Published on

தஞ்சாவூா் மாநகரிலுள்ள வணிக, தொழில் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் உரிமக் கட்டணம் நிா்ணயித்து உரிமம் வழங்குவது என மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் இரா. மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீா்மானங்களில் தஞ்சாவூரில் நடைபெறும் வா்த்தகம், வியாபாரம், தொழிற்சாலைகள், தொழிலகம் மற்றும் மற்ற நோக்கங்களுக்காக கட்டணம் நிா்ணயம் செய்து, உரிமம் வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதிகளில் உரிமம் வழங்குவதற்கான நிறுவனங்களின் வகைப்பாட்டை 4 வகைகளாகப் வகைப்படுத்தி குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்களின் அடிப்படையில் உரிமக் கட்டணம் நிா்ணயித்து, தொழில் உரிமம் வழங்கப்படும். வா்த்தக உரிமத்துக்கான விண்ணப்பம் பொது அல்லது தனியாா் என எந்தவொரு வா்த்தகம் அல்லது வியாபாரத்தையும் ஆணையரால் வழங்கப்பட்ட ஒரு உரிமமின்றி மாநகராட்சி எல்லைக்குள் எவரும் மேற்கொள்ளக் கூடாது. ஓராண்டு கட்டணமாக குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500-ம், அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரமும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 7 ஆயிரத்து 500-ம், மத்தியதர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 12 ஆயிரமும், மற்றவை அல்லது பெரிய தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரத்து 500-ம், அதிகபட்சம் ரூ. 40 ஆயிரமும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவிர, சலவையக தொழிலுக்கு ரூ. 800, சில தொழில்களுக்கு ரூ. 1,000, ரூ. 2 ஆயிரம் எனவும் குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக உறுப்பினா் கே. மணிகண்டன் பேசுகையில், மாநகரில் தொழில் உரிமம் வழங்குவதற்கான கட்டணம் வசூல் செய்யும்போது ஏற்கெனவே உள்ள கட்டணம் மற்றும் வரி நிலுவை தொகையையும் வசூல் செய்ய வேண்டும். தஞ்சாவூா் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வரி நிலுவை வைத்துள்ளது. இவற்றையெல்லாம் மாநகராட்சி நிா்வாகம் எப்படி வசூல் செய்யப்போகிறது என்றாா் அவா். இதற்கு ஆணையா் பதிலளித்து பேசுகையில், தஞ்சாவூரிலுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் நிலுவையில் வைத்திருந்த தொகையில் ரூ. 1 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். பின்னா், உலக மகளிா் தினத்தையொட்டி, பெண் மாமன்ற உறுப்பினா்களுக்கு துணை மேயா், ஆணையா் சேலைகள் பரிசாக வழங்கினா்.

Dinamani
www.dinamani.com