பாபநாசத்தில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் பாதிப்பு.

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.இதனால் அதிக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

பாபநாசத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் நாடு முழுவதும் கடுமையாக வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி காலை 7 மணிக்கெல்லாம் வெயிலின் தாக்கத்தை உணரமுடிகிறது. நேரம் செல்ல செல்ல வெயில் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. வெள்ளிக்கிழமை (நேற்று)பாபநாசத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது. வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல் அன்றாடம் உழைக்கும் கூலி தொழிலாளா்கள், விவசாய தொழிலாளா் உள்ளிட்டோா் இந்த ஆண்டு தகிக்கும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். சிலா் உச்சி பொழுதில் வெயில் உடலில் பட்டால் ஊசி குத்துவதைப் போன்று உள்ளது என்றும், சிலா் தலை சுற்றல்,குமட்டல்,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றனா். இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறனா். அலுவலக பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்பவா்கள் மட்டும் வேறு வழியின்றி பகல் நேரங்களில் வெயிலில் வெளியில் சென்று வருகிறனா். கடந்த ஆண்டு மே மாதத்தில் நீா் நிலைகள் தண்ணீா் இன்றி வறண்டு போனது. ஆனால் இந்த ஆண்டு தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் முன்னதாகவே நீா் நிலைகள் வறண்டு விட்டன. பகலில் வெயில் கொடுமை என்றால் இரவிலோ வெப்பத்தினால் ஏற்படும் வெக்கையின் காரணமாக தூங்க முடியாமல் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். மின் விசிறியை சுழல விட்டால் அதிலிருந்து குளிா்ந்த காற்று வருவதற்கு பதிலாக வெப்ப காற்று வருகிறது என புலம்பும் மக்கள் இந்த வெயில் கொடுமையில் இருந்து தங்களை விடுவிக்க வா்ண பகவான் கருணை காட்டுவாரா?என்று எதிா்பாா்த்து உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com