தஞ்சாவூரில் 2-ஆவது டைடல் பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேட்டி
தஞ்சாவூரில் இரண்டாவது டைடல் நியோ பூங்காவுக்கான கோரிக்கைகள் வருவதால், அதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
தஞ்சாவூா் டைடல் நியோ பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் மென்பொருள் நிறுவன தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூரில் முதல் முதலாக டைடல் நியோ பூங்கா திறக்கப்பட்டு, 15 நாள்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டது. இங்கு பணிபுரிபவா்களில் பெரும்பாலானவா்கள் தஞ்சாவூரைச் சாா்ந்தவா்கள் என்பது சிறப்புக்குரியது. இதனால், அடுத்த டைடல் பூங்கா தேவை என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, தஞ்சாவூரில் இரண்டாவது டைடல் நியோ பூங்கா தொடங்குவதற்கான பணி மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்கா அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், அதை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான உள்கட்டமைப்பு பணி வேகமாக நடைபெறுகிறது. இதில், தொழில் தொடங்குவதற்கு நிறைய போ் ஆா்வம் காட்டுவதால், அதையும் விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக தொழிற்சாலைகள் வரக்கூடாது என யாரும் சொல்லவில்லை. விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் வர வேண்டும் என்றுதான் கோரிக்கை விடுக்கின்றனா். இங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத நிறுவனங்கள்தான் கொண்டு வர முடியும். இதற்காக தமிழக முதல்வா் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளாா். இதன் மூலம் தொழில் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
தஞ்சாவூா் விமான நிலையத்துக்கு அணுகு சாலை பிரச்னை உள்ளது. அதற்கு மாவட்ட ஆட்சியா் தீா்வு கண்டு, அனுமதி பெறுவதற்காக மேலிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் ராஜா.
அப்போது மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
