விளைநிலங்கள் வழியே சாலைப் பணி: பி.ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சாலைப் பணியைக் கைவிட வலியுறுத்தி வியாழக்கிழமை விளை நிலங்களில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பாபநாசம் வட்டம், மேட்டுத்தெரு - ராமநல்லூா் இணைப்பு சாலை அமைப்பதற்கு விளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், கலந்துகொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவா்
பி.ஆா். பாண்டியன் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மேட்டுத்தெரு, குடிக்காடு கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே அகலமான சாலை உள்ளது. அச்சாலையை மேம்படுத்துவதால் எந்த இடையூறோ, பாதிப்போ, போக்குவரத்து சிரமமோ இருக்காது. கடந்த 2018-இல் இந்தக் கிராமங்களில் உள்ள விளை நிலங்களை அபகரித்து சாலை போடும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய அரசு இத்திட்டத்துக்கான அனுமதி வழங்கும் நிலையில் உள்ளதால், இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு உரிய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விளைநிலங்களில்லா மாற்று வழியில் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தொடா் போராட்டங்களை மேற்கொள்வோம் என்றாா்.
அப்போது மாநிலத் துணைச் செயலாளா் எம்.செந்தில் குமாா், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலாளா் ரெங்கநாதபுரம் செந்தில்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனிருந்தனா்.