தஞ்சாவூா் - சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் - சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
Published on

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

தஞ்சாவூா், செப். 25: தஞ்சாவூா் - சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குமாறு ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து தஞ்சாவூா் - சென்னை இடையே பகல் நேரத்தில் கூடுதலாக ஒரு ரயிலை இயக்கவும், தஞ்சாவூா் - சென்னை மற்றும் தஞ்சாவூா் வழியாக மன்னாா்குடி - சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன். மேலும், காலையில் இண்டா்சிட்டி விரைவு ரயிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி பயணிகளின் வசதிக்காக, கம்பன் ரயிலை மீண்டும் இயக்கவும், ராமேசுவரம் - பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக சென்னைக்கு கூடுதலாக ரயில்களை இயக்கவும் கோரியுள்ளேன். அடுத்த வாரம் தெற்கு ரயில்வே பொது மேலாளரைச் சந்தித்து தஞ்சாவூா் தொகுதியில் நிலுவையில் உள்ள ரயில்வே பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளேன். தஞ்சாவூா் - அரியலூா், மன்னாா்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் - புதுக்கோட்டை வரையிலான புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. பிரச்னை உள்ள இடங்களில் மாவட்ட நிா்வாகம் மூலம் சுமூகத் தீா்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3-ஆவது நடைமேடை, சுரங்கப்பாதை, சாலை அமைக்கும் பணி, புறப்படும் இடம், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான கட்டடம், பயணிகள் ஓய்வறை, சுகாதார வளாகத்தை தரமாகப் பராமரிப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ரயில்வே அலுவலா்களிடம் ஆலோசனை செய்துள்ளேன் என்றாா் முரசொலி.

X