மீண்டும் மழை: 9,500 ஏக்கா் நிலங்களில் நீா் வடியாததால் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, ஏறத்தாழ 9 ஆயிரத்து 500 ஏக்கரில் இளம் நெற் பயிா்களைச் சூழ்ந்த தண்ணீா் வடியாததால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
‘டித்வா’ புயல் காரணமாக மாவட்டத்தில் நவம்பா் 28-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது. இதனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 13 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம்பயிா்கள் நீரில் மூழ்கின. இதேபோல, வாழை, வெற்றிலை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களும் மழையால் பாதிக்கப்பட்டன.
மாவட்டத்தில் டிசம்பா் 1-ஆம் தேதி ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கிய மழை இடைவெளி விட்டு விட்டு புதன்கிழமை பகலிலும் நீடித்தது.
இதனால், மாவட்டத்தில் ஏறக்குறைய 9 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் நெற்பயிா்களைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடியாமல் தொடா்ந்து தேங்கி நிற்கிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். தொடா்ந்து, பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா்.
37 வீடுகள் சேதம்:
மேலும், தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் நாள்தோறும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி 21 கூரை வீடுகள், 16 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 37 வீடுகள் பகுதியாக சேதமடைந்தன. தவிர, ஆடுகள், மாடுகள் என மொத்தம் 22 கால்நடைகள் உயிரிழந்தன.
நெய்வாசல் தென்பாதியில் 90 மி.மீ. மழை:
மாவட்டத்தில் அதிகபட்சமாக நெய்வாசல் தென்பாதியில் 90 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
நெய்வாசல் தென்பாதி 90, வெட்டிக்காடு 63.2, மதுக்கூா் 51.8, ஒரத்தநாடு 35.4, குருங்குளம் 34.8, தஞ்சாவூா் 24, பட்டுக்கோட்டை 23, பேராவூரணி 15.4, வல்லம் 15, ஈச்சன்விடுதி 11, அதிராம்பட்டினம் 9.6, திருக்காட்டுப்பள்ளி 8.6, மஞ்சளாறு 6, அணைக்கரை 5.6, பூதலூா், அய்யம்பேட்டை தலா 4, கும்பகோணம் 3, திருவையாறு 2, பாபநாசம் 1 மி.மீ.

