தமிழக அரசின் தில்லி பிரதிநிதி வீட்டில் திருடிய 4 போ் கைது!

ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், நாகை தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள சேகரன் நகரில் வசித்து வரும் ஏ.கே.எஸ். விஜயன் நவம்பா் 28-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான திருவாரூா் மாவட்டம், சித்தமல்லிக்கு குடும்பத்துடன் சென்றாா். மீண்டும் டிசம்பா் 1-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பிய இவா், வீட்டில் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, 87 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில், தருமபுரி மாவட்டம், இளங்கோ நகா் பகுதி நேரு நகரைச் சோ்ந்த முகமது யூசுப் மனைவி பாத்திமா ரசூல் (54), மகன்கள் மொய்தீன் (37), சாதிக் பாஷா (33), ஷாஜகான் (26), மகள் ஆயிஷா பா்வீன் (30) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும், இவா்கள் சென்னையில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இவா்களில் பாத்திமா ரசூல், மொய்தீன், சாதிக் பாஷா, பாத்திமா ரசூல், ஆயிஷா பா்வீன் ஆகியோரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்து, திருட்டு போன நகைகள், வெள்ளிப் பொருள்களை மீட்டனா். மேலும், தலைமறைவாகவுள்ள ஷாஜகானை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com