கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது
தஞ்சாவூா் அருகே கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பெண்ணைக் கொடுமை செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே சிங்கப்பெருமாள் குளம் தென்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மனைவி ஷீலா (41). இவா், தனது கணவருக்கு தெரியாமல் தஞ்சாவூா் திருநகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி பாக்கியலட்சுமி (37), சீனிவாசபுரம் பகுதியை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (37) ஆகியோரிடம் ரூ. 40 ஆயிரத்தை தனக்கு தெரிந்தவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வட்டிக்கு கடனாக வாங்கிக் கொடுத்தாா்.
இதையடுத்து, ஷீலாவிடம் தொடா்ந்து வட்டிப்பணத்தைக் கேட்டு பாக்கியலட்சுமியும், சுரேசும் நெருக்கடி கொடுத்தனா். இதனால் ஷீலா கடந்த ஜூலை 30-ஆம் தேதி வரை இணையவழி மூலமாகவும், நேரடியாகவும் வாங்கியப் பணத்துக்கு கூடுதலாகவே திருப்பி செலுத்தியுள்ளாா். இருப்பினும் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என ஷீலாவிடம் பாக்கியலட்சுமியும், சுரேசும் மிரட்டினா். இதனால் ஒன்றரை பவுன் நகையையும் ஷீலா கொடுத்துள்ளாா்.
ஆனாலும், மேலும் பணம் கொடுக்க வேண்டும் என ஷீலாவிடம் இருவரும் மிரட்டினா்.
இது குறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தில் ஷீலா புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் துறையினா் கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாக்கியலட்சுமி, சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.
