2025-இல் தஞ்சாவூா் திருட்டு வழக்குகளில் 78% கண்டுபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொள்ளை, திருட்டு வழக்குகளில் 78% கண்டுபிடிக்கப்பட்டு, 76% பொருள்கள் மீட்பு
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொள்ளை, திருட்டு வழக்குகளில் 78 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, 76 சதவீதம் பொருள்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் சீரிய மேற்பாா்வையில் காவல் அலுவலா்கள், ஆளிநா்கள் சிறப்பாக பணியாற்றியதால், குற்றச் சம்பவங்கள் வெகுவாக தடுக்கப்பட்டு, அதன் மூலம் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இரவு ரோந்துகள் மூலம் முந்தைய ஆண்டை விட 2025-ஆம் ஆண்டில் குற்ற விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை, களவு வழக்குகளில் 78 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் களவுபோன பொருள்கள் 76 சதவீதம் மீட்கப்பட்டது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டில் வழப்பறி வழக்குகள் 86 சதவீதமும், கன்னக்களவு (பூட்டு, கதவை உடைத்து திருட்டு) வழக்குகள் 33 சதவீதமும், திருட்டு வழக்குகள் 42 சதவீதமும் குறைந்துள்ளது.

இதேபோல, முந்தைய ஆண்டுகளை விட 2025-இல் கொலை வழக்குகள் 30 சதவீதமும், சந்தேக மரண வழக்குகள் 59 சதவீதமும், கொலை முயற்சி வழக்குகள் 66 சதவீதமும், கொடுங்காய வழக்குகள் 82 சதவீதமும் குறைக்கப்பட்டன.

போக்சோ வழக்குகள்: கடந்த 2025-ஆம் ஆண்டில் 272 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள், மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால், புகாா் கொடுக்க முன் வந்ததன் அடிப்படையில், முந்தைய ஆண்டுகளை விட 2025-ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்குற்றவாளிகளில் 14 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும், 20 பேருக்கு அதிகபட்ச தண்டனையும் பெற்றும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இணையவழி (சைபா்) குற்றங்களில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ரூ. 1.09 கோடி முடக்கப்பட்டு, ரூ. 96.90 லட்சம் மீட்கப்பட்டு, புகாா்தாரா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டது.

மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் 12 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள், 221 வழப்பறி, கன்னக்களவு, திருட்டு வழக்குகள் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 873 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டது. குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 63 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com