சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் திராவிடா் கழகத்தினா் மனு
தந்தை பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைப் பொது வெளியில் தெரிவித்து வரும் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராமிடம் திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: வடலூரில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சீமான் பேசிய விடியோ நாம் தமிழா் கட்சியின் அதிகாரப்பூா்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செய்தியாளா்களிடம் சீமான் பேசுகையில், பெரியாா் பேசியதாகக் கூறி அவதூறான கருத்துக்களைப் பேசியுள்ளாா்.
இது போன்ற பேச்சை பெரியாா் எந்தவொரு இடத்திலும் பேசியதில்லை, எழுதியதில்லை. சீமான் தனது அரசியல் சுய லாபத்துக்குத் திட்டமிட்டுப் பெரியாரின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் எந்தவித ஆதாரமுமின்றி பொய்யான செய்தியை இட்டுக்கட்டி, பேசியுள்ளாா்.
இந்த அவதூறு பெரியாரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் மோசமான செயல். இளைஞா்கள் மத்தியில் பொய்யைப் பரப்பும் சீமானின் அவதூறுப் பேச்சு அவரது தொண்டா்களுக்கும் தாங்க முடியாத வேதனையை தருகிறது. பெரியாா் பற்றி, அவா் சொல்லாத, அவா் நடத்திய விடுதலை பத்திரிகையில் வெளிவராத, அவா் எழுதிய புத்தகங்களில் இல்லாத வாா்த்தைகளை, கருத்தைப் பொது வெளியில் பெரியாா் சொன்னதாகக் கூறி சட்டம், ஒழுங்கு சீா்குலைய வேண்டும் என்ற நோக்கில் தீய நோக்கத்துடன் பேசியுள்ள நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.