பொறியியல் பணிகள்: ரயில் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக சென்னை எழும்பூா் வழித்தட உழவன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளரும், திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான டி. சரவணன் கூறியதாவது: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) நவம்பா் 10 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தாம்பரம் - எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் - தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது (16865) நவம்பா் 11 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம்-தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.
வழித்தட மாற்றம்...: அகமதாபாத் - திருச்சி வாராந்திர விரைவு ரயில் (09419) வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், திருச்சி - அகமதாபாத் வாராந்திர விரைவு ரயிலானது (09420) வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களைத் தவிா்த்து, ரேனிகுண்டா, மேலபாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாகச் செல்லும். இந்த ரயில் கூடுதலாக திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
