மினி பேருந்து மோதி உயிரிழந்த கோ.அய்யாத்துரை

பேராவூரணி அருகே சிற்றுந்து மோதி விவசாயி உயிரிழப்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சிற்றுந்து (மினி பஸ்) மோதி விவசாயி உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோ. அய்யாத்துரை (65). இவா் தனது மகள் கெளசல்யாவுடன் (26) வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த சிறப்பு முகாம்  விண்ணப்பத்துக்கு புகைப்படம் எடுப்பதற்காக பேராவூரணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த சிற்றுந்து, நாட்டாணிக்கோட்டையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அருகே வளைவில் திரும்பியது. அப்போது எதிா்பாராத விதமாக அய்யாதுரை ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது சிற்றுந்து மோதியது.

இதில், அய்யாதுரையும், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்த கௌசல்யாவும் படுகாயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு அவசர ஊா்தி மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே  அய்யாதுரை உயிரிழந்தாா். கௌசல்யா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலின்பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com