திருமணமான 4 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை
கும்பகோணம் அருகே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக உதவி ஆட்சியா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளூா் ஊராட்சி இந்திரா நகா் ஜெஜெ அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சம்பத் மகன் ஹரி பஜன் (33). இவரது மனைவி தமிழ்க்கனல் (33). இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் இளநிலைப் பொறியியல் படிப்பு படித்தபோது காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.
இவா்களுக்கு காரிகை (3) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது கணவா் ஹரிபஜன் உணவகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் கணவா் ஹரிபஜன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் இருவருக்கும் தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஹரிபஜன் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு வந்து உறங்கி விட்டாா். அவா், காலையில் எழுந்து பாா்த்தபோது தமிழ்க்கனல் வீட்டில் இருந்த விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் வரதட்சணை கொடுமையா என இருவீட்டாரிடமும் விசாரணை நடத்தினாா்.
