சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்
சேதுபாவாசத்திரத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கிழக்கு கடற்கரை சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் மீனவா் காலனி சாலை, பள்ளிவாசல் சாலையைச் சீரமைத்துத் தருவதாகவும், கிழக்கு கடற்கரை சாலையில் குடிநீா் தொட்டி அருகே கழிவு நீா் தேங்கி நிற்பதை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் விரைந்து பழுதான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், சிஐடியு மீன்பிடித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பெரியண்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் கிளை செயலா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் அப்பகுதி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் மாரிமுத்து, சேதுபாவாசத்திரம் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ் குமாா், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், அப்பகுதி சாலைக்கு உடனடியாக கிராவல் அடித்துத் தரப்படும், ஒரு மாதத்திற்குள் தாா்ச் சாலை அமைத்துத் தரப்படும் எனவும் உறுதி அளித்தனா். இதனை ஏற்று போராட்டம் ஈடுபட்டவா்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனா்.
