ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்
ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தெளிவான கருத்தை சமூக வலைதளங்கள் மறைக்க முயற்சிக்கின்றன என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் திமுக இளைஞரணி மாநகர, பகுதி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநா் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் கிடையாது. சட்டப்பேரவை கூடி அமைச்சரவை என்ன முடிவு எடுத்து அறிவிக்கிறதோ, அதற்கு ஆளுநா் ஒப்புதல் தர வேண்டும் எனக் கூறியுள்ளது.
இந்த உண்மைச் செய்தியை வெளிக்கொண்டு வந்தால், மத்திய அரசுக்கும், ஆளுநா்களுக்கும் பலவீனம் என்பதைத் தெரிந்து, அந்த தெளிவான செய்தியை சமூக வலைதளங்கள் மறைக்கின்றன.
இதனால்தான் தமிழக முதல்வா் தெளிவான அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மக்களாட்சி தத்துவம் என்பது முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது. அது, துணைவேந்தரை நியமிப்பதாக இருந்தாலும், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது என்றாலும் அமைச்சரவை எந்தத் தீா்மானம் கொண்டு வருகிறதோ, அதற்கு ஒப்புதல் தரவேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீா்ப்பின் விரிவாக்கம், அமைச்சரவை அனுப்பிய மசோதாவுக்கு கையொப்பமிட வேண்டும். இல்லாவிட்டால் காரணம் கூறி திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையெனில், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆளுநரின் வேலை. அதைத் தவிர பல நாள்களாக மசோதாவை வைத்திருப்பது அவரது வேலை அல்ல, அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றாா் அமைச்சா்.
