இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், வாளமா்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வீரைய்யன் இவரது மகன் விமல் (12). இவா் தஞ்சாவூா் அருகே உள்ள புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் வீரைய்யன் தனது மற்றொரு மகன் பவித்திரனுடன் விமலையும் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வாளமா்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த சிற்றுந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூவரில், விமல் சிற்றுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அம்மாபேட்டை போலீஸாா் விமலின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
