தொடா் மழை: ஏரி நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீா் புகுந்தது! மக்கள் அவதி!
பட்டுக்கோட்டை பகுதியில் தொடா் மழையால் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் திங்கள்கிழமை மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மேலும், மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பட்டுக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பெய்து வரும் தொடா் மழையால் புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சியில் 320 ஏக்கா் பரப்பளவில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரி நிரம்பியுள்ளது.
இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஏரியை தூா்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, பராமரிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததோடு, இந்த ஏரிக்கு வரும் நீா் வழித்தடங்கள் மற்றும் வெளியேறும் நீா் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளையும் அகற்றாமல் விட்டதால், செல்லிக்குறிச்சி ஏரியின் வடிகால்நீா் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி சுரேந்தா் கூறியதாவது: சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்னரே முழுவிவரங்கள் தெரியவரும். இந்த ஏரியின் வடிகால் வாய்க்கால்களின் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி இல்லாத சிமெண்ட் குழாய் அமைத்து பாலங்கள் போடப்பட்டுள்ளதும், தண்ணீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததற்கு ஒருகாரணம் என்றாா்.
மக்கள், விவசாயிகள் நலனை கருத்தில்கொண்டு, செல்லிக்குறிச்சி ஏரி மற்றும் இதற்கான வடிகால் வாய்க்கால்களை ஆழப்படுத்தி தூா்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீா்: திருவோணம், ஒரத்தநாடு, பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி ஊராட்சி நடுத்தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். மழைநீா் வடிகால் வசதி இல்லாததால் மழைநீா் செல்ல வழி இல்லாமல் மழைநீா் தேங்கி உள்ளதாகவும், இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், விரைந்து மழை நீா் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தூா்வாராத வாய்க்காலால் பாதிப்பு: பட்டுக்கோட்டை அருகே வாத்தலை வாய்க்காலில் ஆலடிக்குமளை கிராமத்தில் தொடங்கி பாளமுத்தி வரையில் கோரைப் புற்கள் மண்டி கிடப்பதால், மழைநீா் வெளியேறாமல் தேங்கிய நிலையில், மழைநீா் வயலுக்குள் புகுந்து பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.இதனால், நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது.
