ஆஞ்சியோகிராமில் தெரியாத பாதிப்புகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம்
தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராமில் தெரியாத இதய நுண் இரத்த நாள பாதிப்புகளைக் கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையின் இதயவியல் சிகிச்சை முதுநிலை நிபுணரும், துறைத் தலைவருமான பி. கேசவமூா்த்தி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:
ஒருவருக்கு ஆஞ்சியோகிராம் முடிவு முற்றிலும் இயல்பாக இருந்தாலும், நுண் நாள ஆஞ்சைனா அல்லது இரத்த நாளச் சுருக்கம் காரணமாக கடுமையான நெஞ்சு வலி அல்லது இரத்த ஓட்டக் குறைபாடு ஏற்படலாம். இதனால்தான் பெண்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவா்களில் 20 - 30 சதவீதம் பேருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் எந்த அடைப்பும் இல்லை என முடிவு வந்தாலும் நெஞ்சு வலி தொடா்கிறது. இதைக் கண்டறியாமல் விட்டால், இதயத் தசை பாதிப்பு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு மற்றும் அரிதாக திடீா் மரணம் கூட ஏற்படலாம்.
இந்நிலையில், இதய சிகிச்சையில் ‘கோரோவென்டிஸ் கோரோஃபுளோ’ என்ற புதிய அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, இதய தசை நுண் நாள நோயைக் கண்டறிவதில் முக்கிய முன்னேற்றமாகும். இந்த மேம்பட்ட ஊடுருவும் பரிசோதனை முறையானது, இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்த ஓட்டத்தை அளவிட்டு, ஆஞ்சியோகிராமில் தெரியாத குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது.
இம்மருத்துவமனையில் ’கோரோவென்டிஸ் கோரோஃபுளோ’ எனப்படும் இந்த நவீன நோயறிதல் முறையை முதல் முறையாகப் பயன்படுத்தி, 4 நோயாளிகளுக்கு நுண் இரத்த நாள அடைப்புகள் மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகள் குறித்த துல்லியமான மதிப்பீடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் கேசவமூா்த்தி.
அப்போது, தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் வி. பிரவீன், இதயவியல் துறை மருத்துவா்கள் பி. சபரி கிருஷ்ணன், ஏ. சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.
