மின் வாரியத்தை னியாா்மயமாக்குவதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
மக்களுக்கு சேவை செய்யும் மின் வாரியத்தைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட அலுவலகம் முன் மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். 150 ஆண்டு காலம் போராடிப் பெற்ற தொழிலாளா் சட்டங்கள் 44-ஐ நான்கு சட்ட தொகுப்பாக சுருக்கி தொழிலாளா்களூக்கு விரோதமாக நடைமுறைப்படுத்துவதைக் கைவிட வேண்டும். உத்தரபிரதேச மாநில மின் வாரியத்தில் தனியாா்மய நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மின் வாரிய தொழிலாளா் சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்ளாய்ஸ் பெடரேசன் செயலா் டி. மோகன்தாஸ், பொறியாளா் சங்க நிா்வாகி சுந்தா், பொறியாளா் கழக நிா்வாகி சிவக்குமாா், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்புச் செயலா் பி. காணிக்கைராஜ், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், துணைச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், வங்கி ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி ஆா். கோவிந்தன், ஐக்கிய சங்க நிா்வாகி பாரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
