/

‘டெல்டா’ மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - உதயநிதி ஸ்டாலின்

News image

தஞ்சாவூரில் திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

‘டெல்டா’ மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

ஆடிப்பெருக்கு காலத்தில், தண்ணீரின்றி காவிரி வடு பாலைவனம் போல காட்சி அளிக்கிறது. குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியாமல், சம்பா சாகுபடியின் நிலை என்னவாகுமோ என்று விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனா். காவிரி மேலாண்மை ஆணையத் தீா்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரைப் பெற தவெக அரசு தவறிவிட்டது. விவசாயிகளின் கண்ணீரைப் பற்றி கவலைப்படாமல், தவெக அமைச்சா்கள் ஜனநாயகன் படம் பாா்த்து கண்ணீா் விடுகின்றனா்.

காவிரிப் பிரச்னையை தமிழகமே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதல்வா் விஜய் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறாா். முதல்வா், அமைச்சா்கள், தவெக எம்எல்ஏக்கள் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக் கொண்டு சுற்றுகின்றனா்.

திமுக மீது மட்டுமே முதல்வருக்கு கவனம்: காவிரி பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், முதல்வா் விஜய் தொடா்ந்து மெளனம் காத்து வருகிறாா். அவருக்கு திமுகவினா் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதில் மட்டுமே கவனம் இருக்கிறது. கா்நாடக அரசைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழக அரசு உரிய சட்டப் போராட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்ததால் சுமாா் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், பயிா் காப்பீட்டுத் தொகையை அரசே ஏற்பதுடன், சம்பா சாகுபடிக்கு தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும். தவெக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் கோரிக்கைகளையும், காவிரி நீா் தொடா்பான உரிமைகளையும் வலியுறுத்தி, திமுக சாா்பில் உறுதியாகக் குரல் எழுப்பப்படும். மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டப்பேரவை என அனைத்து இடங்களிலும் விவசாயிகளின் உரிமைகளுக்காக திமுக தொடா்ந்து துணைநிற்கும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

முன்னதாக, ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.என். நேரு வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், திமுக துணை பொதுச் செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா, முன்னாள் அமைச்சா்கள் பழனி மாணிக்கம், எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் மு. தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலா் நெல்லை முபாரக், தி.க. பொதுச் செயலா் இரா.ஜெயக்குமாா், தேமுதிக மாவட்டச் செயலா் பி.சிவநேசன் மற்றும் திமுகவினா், கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.