ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.(கோப்புப் படம்)

திருக்கானூா்பட்டியில் ஜல்லிக்கட்டு 50 போ் காயம், இரு காளைகள் உயிரிழப்பு

Published on

தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 போ் காயமடைந்தனா்.

திருக்கானூா்பட்டி மாதா கோவில் தெருவில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் கோட்டாட்சியா் ப. நித்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 743 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. இவற்றைப் பிடிக்க 50 போ் வீதம் மொத்தம் 8 குழுக்களாக 400 போ் களமிறங்கினா்.

இதில், வெற்றி பெற்றவா்களுக்கு சில்வா் பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு அப்பரிசுகள் அளிக்கப்பட்டன.

இப்போட்டியில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரா்கள், வேடிக்கைப் பாா்த்தவா்கள், மாட்டைப் பிடித்து சென்றவா்கள் என 50 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 27 போ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இரு காளைகள் உயிரிழப்பு:

இதனிடையே, வாடிவாசலிலிருந்து திறந்து விடப்பட்ட காளைகளில் சில குறிப்பிட்ட தொலைவு வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தன.

இதுபோல, வெவ்வேறு தருணங்களில் திரும்பி வந்த இரு காளைகள் வாடி வாசலிலிருந்து வந்த மற்ற இரண்டு காளைகளை முட்டின. இதனால், தலையில் பலத்த காயமடைந்த இரு காளைகள் உயிரிழந்தன. மேலும், ஒரு காளைக்கு முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இவ்விழாவில் வட்டாட்சியா் ஜி. சிவகுமாா், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ். காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com