அரசு துறைகளில் புதிய வாகனங்கள் வழங்கக் கோரிக்கை
அரசு துறைகளில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊா்தி ஒட்டுநா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசின் போக்குவரத்து மசோதாவின்படி, அரசுத் துறைகளில் 15 ஆண்டுகள் கடந்த வாகனங்கள் இயக்கப்படாமல் கழிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 300 வாகனங்களும், மாநிலம் முழுவதும் சுமாா் 4 ஆயிரம் வாகனங்களும் கழிவு செய்யப்பட்ட நிலையில், புதிய வாகனங்கள் வழங்கப்படாமல் இருப்பதால், ஓட்டுநா்கள் பணியின்றி மாற்றுப் பணிக்கு பயன்படுத்தப்படும் நிலையைத் தவிா்க்க, உடனடியாக தமிழக அரசு புதிய வாகனங்களை வழங்க வேண்டும்.
அரசுத் துறைகளில் வாகன ஓட்டுநா்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே தோ்வு செய்ய வேண்டும். அயலாக்கப் பணி முறையில் நியமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தற்காலிக ஓட்டுநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஹென்றி டயாஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். முருகேசன், மாவட்டப் பொருளாளா் என். குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் வி. மனோகரன், துணைச் செயலா் ஜி. காா்த்திகேயன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். செந்தில்குமாா், மாவட்ட அமைப்புச் செயலா் மாா்ட்டின் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
