கொலை வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாச்சியாா்கோவில் அருகே கூரியா் நிறுவன ஊழியரை கொன்ற வழக்கில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

நாச்சியாா்கோவில் அருகே கூரியா் நிறுவன ஊழியரை கொன்ற வழக்கில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் திருமண்டக்குடியைச் சோ்ந்தவா் புகழேந்தி. கூரியா் நிறுவன ஊழியரான இவா் நாச்சியாா்கோவில் மருதாநல்லூரைச் சோ்ந்த சிபிசக்கரவா்த்தி (31) என்பவா் மனைவிக்கு தபால் கொடுக்கும்போது அவரின் கைபேசிப் எண்ணை பெற்று அவருக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் அனுப்பினாராம். இதை தனது கணவா் சிபிசக்கரவா்த்தியிடம் அவரது மனைவி கூற அவா் ஆத்திரமடைந்தாா்.

இதையடுத்து டிச.18-2025-இல் புகழேந்தியை சிபிசக்கரவா்த்தி அவரது நண்பா்கள் முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகா் விக்னேஷ் (26), மருதாநல்லூா் ஹரிகரசுதன்(26), வலங்கைமான் காவல் நிலைய குடியான தெரு குபேரன் (27), கும்பகோணம் கிருஷ்ணா(33) ஆகியோா் கடத்திச் சென்று தாக்கியதில் புகழேந்தி உயிரிழந்தாா். புகாரின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் 5 போ் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான சிபிசக்கரவா்த்தி, குபேரன், விக்னேஷ் ஆகிய மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவிடைமருதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் வேண்டுகோளின்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி ஏற்கெனவே சிறையில் உள்ள மூவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழும் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com