1,260 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

Published on

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 1,260 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அறிவித்த அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைத் முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி முல்லை நகா் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்தாா். இதேபோல, மாவட்டத்தில் 1,260 நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட்டது. இதில், ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம், இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதன்படி, மாவட்டத்தில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 131 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 220.89 கோடி மதிப்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா்அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com