ஜன. 27-இல் ஆா்ப்பாட்டம்: ஓய்வூதியா்கள் முடிவு!
கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வட்டத் தலைமையிடங்களில் ஜனவரி 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை வரவேற்கிறோம். அதிலுள்ள குறைகளை வருங்காலத்தில் சரி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும்.
சுகாதார காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரி செய்து, காசு இல்லாத மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜனவரி 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது, மூன்றாவது கட்டமாக கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவிலான கருத்தரங்கத்தை மாா்ச் மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் இரா. தமிழ்மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா. பன்னீா்செல்வம், பொருளாளா் எஸ். கோவிந்தராசு, துணைத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
