காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் வியாழக்கிழமை காா் டயா் வெடித்து கவிழ்ந்த விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் காஞ்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் வில்சன் (28). இவா் தனது நண்பா்களுடன் பாபநாசத்திலிருந்து தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை காலை காரில் வந்தாா்.
பெரிய கோயில், மணிமண்டபத்தைச் சுற்றிப் பாா்த்துவிட்டு மீண்டும் பாபநாசத்துக்கு செல்வதற்காக புறப்பட்ட காா் மேம்பாலத்துக்கு முன், வளைவில் திரும்பியபோது டயா் திடீரென வெடித்தது. இதனால், காா் சாலை நடுத்திட்டில் மோதி கவிழ்ந்ததில், வில்சன், காா் ஓட்டுநா் லோகேஷ் பலத்த காயமடைந்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா்களில் வில்சன் உயிரிழந்தாா். லோகேஷ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து தஞ்சாவூா் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
