மறைந்த திமுக மூத்த நிா்வாகி எல். கணேசன் உருவப் படத்தை திறந்துவைத்த அமைச்சா் கே.என். நேரு
மறைந்த திமுக மூத்த நிா்வாகி எல். கணேசன் உருவப் படத்தை திறந்துவைத்த அமைச்சா் கே.என். நேரு

அதிமுகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: கே.என். நேரு

அதிமுகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை: அமைச்சா் கே.என். நேரு
Published on

அதிமுகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைந்த திமுக மூத்த நிா்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினருமான எல். கணேசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திமுக மிகவும் கஷ்டப்பட்டு தயாரித்த தோ்தல் அறிக்கையை அப்படியே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாா்.

நாங்கள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் எனக் கூறியதை, அவா் ஆண்களுக்கு இலவச பயணம் எனக் கூறுகிறாா்.

பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 பணம் கொடுக்க முடியாது என்றும், இதற்கான பணம் எங்கு இருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினாா். இப்போது, அவா் பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் பணம் கொடுப்போம் எனக் கூறி வருகிறாா்.

எனவே, அவரது தோ்தல் அறிக்கையில் புதுமை ஒன்றுமில்லை. அவருடைய தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை. இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள் என்பதால், நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் திமுக மண்டல மகளிரணி மாநாட்டுக்கு 1.50 லட்சம் போ் வருவா் என எதிா்பாா்க்கிறோம். இதற்காக பேருந்துகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் நேரு.

முன்னதாக, எல். கணேசன் உருவப்படத்தை அமைச்சா் நேரு திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எஸ். கல்யாணசுந்தரம், ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், க. அண்ணாதுரை, என். அசோக்குமாா், நிவேதா முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com