டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு தோ்தலில் அளித்த வாக்குறுதிகளின்படி, பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கா்நாடக அரசையும், அதற்குத் துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி பிரச்னையில் தமிழக அரசு விரைவாகச் செயல்பட வலியுறுத்தியும், தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம், இழப்பீடு வழங்கக் கோரியும் ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன் தலைமையில் பி. செந்தில்குமாா், அம்மாபேட்டை ஆா். செந்தில்குமாா், ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல், புலவன்காடு வி. மாரியப்பன் உள்பட பெரும்பாலான விவசாயிகள் முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனா். சுமாா் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகம் தொடங்கப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, இந்த வளாகத்தை ரத்து செய்துவிட்டு, அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும். மல்லிப்பட்டினம் ஏ. கமால்பாட்சா: ஏரிகள், வாய்க்கால்கள் தூா் வாரப்படாததால், நிலத்தடி நீா் சரிந்து சாகுபடிப் பரப்பளவு குறைந்து வருகிறது.
ஆட்சியா்: மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் முன்பாக 100 நாள்களுக்குள் முடிக்கும் வகையில் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியைத் தொடா்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் வகையில் நீா் மேலாண்மை திட்டமிடப்படுகிறது.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 500 வழங்கப்படும் என தோ்தல் நேரத்தில் அரசு வாக்குறுதி அளித்தது. இதைச் சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்து, அக்டோபருக்குள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசுக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும், வேலை இழந்த விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதமும் வழங்க வேண்டும்.
சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயா்த்தப்பட்டதால், விவசாய இடுபொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது. இந்நிலையில், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப பயிா்க்கடன் அளவை உயா்த்த வேண்டும்.
எஸ். புதூா் யுவராஜ்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு அதிகபட்சமாக 60 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், ஏக்கருக்கு 70 மூட்டைகள் விளைச்சல் பெற்ற விவசாயிகளால் நெல்லை விற்க முடியவில்லை. எனவே, 70 மூட்டைகளாக இருந்தாலும் கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: சட்டப்பேரவையில் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் பயிா்க்கடன்கள், நகைக்கடன்கள் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக்கூடிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றாா்.
இதனிடையே, பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய கோரி காய்ந்த நெற் பயிா்களுடன் வந்த கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகளும், சா்க்கரை ஆலை கழிவிலிருந்து குடிநீரைக் காப்பாற்ற வலியுறுத்தி தா்ம. சுவாமிநாதன் தலைமையில் வந்த விவசாயிகளும் வெளிநடப்பு செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்களைக் கட்டிக்கொண்டு குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பு

எல் நினோ தாக்கத்தால் வறட்சி: பேரிடராக அறிவிக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 1,183 மனுக்கள் அளிப்பு

மேக்கேதாட்டு அணை, பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தஞ்சாவூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



